காற்றைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்


வாழ்வில் தேடுதல் தவிர்க்க முடியாதது. தெளிய விரும்பியே நாமனைவரும் தேடுகின்றோம். எதைத் தேடுகின்றோம், தேட வேண்டும் என்பதற்கே ஓர் தெளிவு அவசியம். அது பலதரப்பட்ட மக்களுக்குப் பல்வேறாய் அமைகின்றது. தேடுதல் என்பது அவரவர் தேவைகளையும், ஆசைகளையும் பொருத்தே இருக்கின்றது. பெயர், புகழ், செல்வம், கல்வி, கொடை, சமூகப்பணி, இறைவன் என தேடுதல்களின் பரிமாணங்கள் பல. ஆனால் தேடுதலின் நோக்கம் மகிழ்ச்சி, மன நிறைவு, அமைதி இவற்றை அடைவதுவே. துன்பத்தை அடைதற்காக யாரும் எதையும் தேட விரும்புவதில்லை. 

 

பக்குவமுடையோர் உயர் விஷயங்களை நாடுகின்றனர். தற்காலிகமாக இன்பங்களையும், மனமகிழ்வையும் தருவனவற்றைக் காட்டிலும், நிரந்தரமான ஆனந்தத்தை தரக் கூடிய விஷயங்களை அவர்கள் ஆராய்ந்தார்கள். அதன் இறுதியை ஆன்மீகத்தில் கண்டார்கள்.  எல்லா நதிகளும் கடலில் முடிவது போல் , மனிதனின் தேடுதல்கள் ஆன்மீகத்தில் நிறைவு பெறுகின்றது. ஆன்மாவை அறிய விளையும் அறிவே ஆன்மீகம். ஆன்மாவைத் தேடுவோர் அதிசயமானவர்கள்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

படைப்பில் மறைந்திருக்கும் பல்வேறு ஆற்றல்களை, மனிதகுல தேவைகளை, நுட்பமான அறிவினால் ஆராய்ந்து , எல்லோரும் பயனடையச் செய்த பெருமை விஞ்ஞானத்திற்கு உண்டு. அதுபோல மனிதனுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை அறியச் செய்வது மெய்ஞானம். அதுவும் ஓர் அற்புத விஞ்ஞானமே. ஒன்று புற மாற்றத்தைச் சார்ந்தது. மற்றொன்று அக மாற்றத்தின் திறவுகோல். பண்டைய காலங்களில் ரிஷிகள் விஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தனர். மெய்ஞானமும்,விஞ்ஞானமும் வேறுபடாது இருந்தது.

விஞ்ஞானம், அரசியலமைப்பு, பொருளாதாரம், கலை, சமூக ஒற்றுமை, இல்லறம், துறவறம், அறிவு வளர்ச்சி, என அனைத்திற்கும் அடித்தளமாக ஆன்மீகம் அமைந்தது. ஆன்மீகம் எந்த ஒரு வளர்ச்சிக்கும் முரண்பாடாக  நிற்கவில்லை. ஆன்மீகம் என்றாலே அச்சம் கொள்வதும், அதில் அன்றாட வாழ்விற்கான பயனேதுமில்லை எனக் கருதுவதும் சிந்தனைப் பிழையே.  குழந்தைகள் முதல் மூத்தோர்கள் வரை  அனைவருக்கும் ஆன்மீகம்அவசியமே. புறவுலக வளர்ச்சி ஆன்மீகத்தை விட்டு விலகியோ அல்லது ஆன்மீகம் தன்னை புறவுலகில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டாலோ இரண்டும் முழுமையினை அடையாது. இரண்டின் இணைவில் தான் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி சாத்தியம்.

சுவாமி விவேகானந்தர், சிவானந்தர், சின்மயானந்தர் போன்ற மகான்கள் சமுதாயத்தோடு இணைந்து உற்சாகத்தோடு பணி செய்ததோடு மட்டுமில்லாது, தனி மனித ஒழுக்கத்திலும் அப்பழுக்கற்றவர்களாக திகழ்ந்தனர். அதுபோன்று பொது வாழ்வில் முனைப்போடு ஈடுபட்டிருந்த காந்திஜி, திலகர், பாரதியார், இராஜாஜி போன்ற பெரியோர்கள் ஆன்மீகத்திலும் பற்றுடையவர்களாகவே இருந்தனர்.

பண்பை செதுக்குங்கள்

ஆன்மீகம் ஒரு அணுகுமுறை விஞ்ஞானம். அது செயல்களுக்கு விரோதமில்லாதது.  செயல் திறனை வளர்ப்பதோடு , செய்வோனையும் செம்மையாக்குகின்றது. ஆன்மீகத்தின் மையம்  தன்னை அறியும் தத்தவ விஞ்ஞானமாக இருந்தாலும், அது மனிதப் பண்புகளை செதுக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நன்கு கற்றோர் வன்முறையில் ஈடுபடுவதும், தரம் தாழ்ந்து செயல் புரிவதையும் செய்திகளில் படிக்கும் பொழுது ,எங்கோ நமது கல்வியில் அல்லது நாம் கற்றதில் ஒரு குறைபாடு தெரிகின்றது. ஆகவேதான் கல்வியில் ஆன்மீகத்தின் அவசியம் இன்றியமையாததாக உள்ளது. 

ஒரு மனிதனுக்கு மிகச் சிறந்த அடையாளம் அவனிடத்தில் உள்ள பண்புதான். இராமன், இராவணன் ,யுதிஷ்டிரன் ,துரியோதனன் என்ற பெயர்களை கேட்ட மாத்திரத்திலேயே நினைவில் வருவது அவர்களுடைய பண்புகள்தான். இன்னும் சொல்லப் போனால் இவை பண்புப் பெயர்களே. மனிதப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவதென்பது, எல்லோரும் வணங்கத்தக்க அற்புதமான ஒரு சிலையை வடிப்பது போலாகும். எவ்வாறு சிலையானது கல்லிற்குள் மறைந்துள்ளதோ அவ்வாறே பண்பின் இருப்பிடமாகத் திகழ்வது நமது எண்ணங்களே.  சிற்பியானவர் சிற்பத்தை நுட்பமாகச் செதுக்குவது போல் நாம் நம்முடைய எண்ணங்களை செதுக்க வேண்டும். நல்ல எண்ணங்களைத் தக்க வைத்து கொள்வதைக் காட்டிலும் வீணான எண்ணங்களை விட்டொழிக்க நுட்பமான ஆற்றல் அவசியம்.  எண்ணங்களே செயல் வடிவைப் பெற்று நடத்தையாக மாறுகின்றது. எண்ணங்களின் பிரதிபலிப்பே பண்புகள். 

பண்பின் அவசியம்.

பண்பட்ட எண்ணங்கள் நம் மனதிற்கு வலிமை சேர்கின்றது. சூழல் என்னும் சுழற் காற்றில் நாம் சுழன்று போகாமல் காக்கின்றது. பண்புடையோர் சூழ்நிலைகளால் துவண்டு போகாது அதைக் காட்டிலும் உயரமாக வளர்கின்றனர். அவற்றை என்றுமே தம் காலடியில் தக்க வைத்துக் கொள்கின்றனர்.“எவரைக் கண்டு இந்த உலகம் கலங்குவதில்லையோ, எவரொருவர் இவ்வுலகை கண்டு கலங்குவதில்லையோ அவரே எனக்குப் பிரியமானவர்” என்கிறார் கீதையில் கண்ணபிரான். இது பண்பின் உச்சம். நாம் உலகைக் கலங்கச் செய்யாதிருத்தல் மென்மை. உலகைக் கண்டு நாம் கலங்காதிருத்தல் வலிமை. மென்மையும்,வலிமையும் பண்பின் இருபக்கங்கள்.  நம்முடைய முன்னிலையில் எவரும் அச்சமின்றி, கலக்கமடையாது, மகிழ்வோடு நம் இருப்பை நேசிப்பாரெனில் அதுவே நம் அடையாளம்.  நல்லோர் துணையே நற்பண்புகளைச் செதுக்கும் பட்டறை.

சுவாமி சின்மயானந்தரிடம் ஒருவர் எது கலாச்சாரம் ? எனக் கேட்டார். “ மனிதனிடத்திலிருந்து வெளிப்படும் பண்பெனும் நறுமணமே கலாச்சாரம் “ என்றார்.  எண்ணச் சீரழிவு இல்லாமால் நேர்பட வாழும் பண்பின் சாரமே கலாச்சாரம். “பண்புடையோர் இருப்பதால்தான் உலகம் நிலைபெற்று நிற்கின்றது. இல்லாவிடில் உலகம் மண்ணோடு மாய்ந்து விடும்” எனகிறார் வள்ளுவர்.  ஒரு மனிதன் ஆற்றல், அறிவு என எல்லாவற்றையும் பெற்று ஆணவமின்றி பணிவோடிருக்கின்றார் என்றால் அவரே பண்புடையார். அவர் செல்லுமிடமெல்லாம் தூய்மை பெரும். இராமாயணத்தில் முதலில் ஹனுமனைக் கண்டு இலக்குவனிடம் இராமன் கூறியது,“ஆற்றலும், நிறைவும்,கல்வி அமைதியும்,அறிவும் என்னும் வேற்றுமை இவனொடு இல்லையாம்’ என்று. கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்பது கொண்ட தோற்றத்தில் இல்லை. குண வெளிப்பாட்டில்தான் உள்ளது. “உலகில் காற்றைப் போல் திரி” என்கிறது ஒர் வேதமந்திரம்.  காற்று தான் வீசும் திசைகளையெல்லாம்  தூய்மைப்படுத்துகின்றது. அவ்வாறு வாழ முற்படுவதே வாழ்க்கை.

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் 

மக்கட்பண்பு இல்லாதவர் - என்கிறது வள்ளுவம்.

மலர்வோம்

ஆன்மீகம் பண்பில் தொடங்கி பரம்பொருளை அறிவதில் முடிகின்றது. வாழ்வின் வேறொரு கோணத்தை, பரிமாணத்தை நமக்குப் புலப்படுத்துகின்றது. நம்மை பலப்படுத்துகின்றது. நம்பிக்கையே அதன் ஆதாரம். நம்பிக்கையின் முழு வடிவமே மனிதன். நம் எண்ணங்களை சிதையாது தாங்கிப் பிடிப்பதும் அதுவே. “நம்பிக்கை இருந்தால் மலைகளைக் கூட அசைத்து விடலாம். ஆனால் நம் நம்பிக்கை மலையைக் காட்டிலும் வலிதாக இருக்க வேண்டும் “என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. நம்முடைய அடிப்படை இயல்பில் இருக்கக் கூடிய பலவீனம் சந்தேகம்,சோர்வு போன்றவற்றை மாற்றி அமைக்கும் மாற்றுச் சக்தி நம்பிக்கைக்கு உண்டு.  நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம். நம்பிக்கையே மிகச் சிறந்த மூலதனம். நம்பிக்கையுடையவன் அறிவனைத்தையும் பெறுகின்றான் என்கிறது கீதை.(சிரத்தாவான் லபதே ஞானம்) . உயர்ந்த விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கைகளை நாம் இழக்கும் பொழுது நமது மனம் எதிர் மறையாகச் செயல்படுகின்றது. எதிர் மறைச் சிந்தனைகள் தோல்விகளையே சந்திக்கின்றது. மனிதனின் வளர்சிக்கு அது மாபெரும் இடையூறாக நிற்கின்றது. சமுதாயத்தில் நேரும் தீங்குகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது. நம்பிக்கையுடன் கூடிய மனம் எப்பொழுதும் நேர்மறையாகச் சிந்தித்து செயல்படுகின்றது. அது ஆக்கப்பூர்வமன் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே நல்லனவற்றை நம்புவதில், பிறர் அதை நம்பச் செய்வதில் உறுதியோடிருப்போம். பலன் கருதாது எடுத்துரைப்போம். அதன் வழி நடக்க முயல்வோம். “நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம்” என்பார் பாரதி. மாற்றம் என்பது ஒரே நாளில் நேரும் புரட்சி அல்ல. அது மெல்ல நிகழும் அகமலர்ச்சி.  மலர்வதற்காக வாழ்வோம். மலர்வோம். மணம் பரப்புவோம். ஆன்மீகம் போற்றுவோம். அறிவோம் ! தெளிவோம்!

Last modified on Monday, 18 February 2019 03:34
Rate this item
(1 Vote)

89852 comments

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

back to top